திறன் பயிற்சி மையத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமெண்ட் ஆலை சார்பில் இயங்கி வரும் தீக் ஷா திறன் பயிற்சி மையத்தில் உலக இளைஞர்கள் திறன் தினம் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு டால்மியா சிமெண்ட் ஆலையின் தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். கல்லக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜோஸ்பின், டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாக துறை தலைவர் ரமேஷ் பாபு, டால்மியா சிமென்ட் ஆலையின் துணை பொது மேலாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர் ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக தீக் ஷா நர்சிங் பயிற்சி பள்ளி மைய உதவியாளர் இளவரசி வரவேற்று பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் நன்றி கூறினார்.