மோசமான சாலையால் தொடரும் உயிரிழப்பு : பொதுமக்கள் போராட்டம்
திருச்சி, அக். 18 திண்டுக்கல் மாவட்டம், செந்துறையைச் சேர்ந்தவர் இருதயராஜ் (55). இவர் நேற்று திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்தூராம்பட்டியில் உள்ள உறவினருக்கு தனது மனைவியின் தங்கை மகனுக்கு திருமணம் என்பதால் அந்த திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு இருசக்கர வாகனத்தில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். தரகம்பட்டி – மணப்பாறை சாலையில் விடத்திலாம்பட்டி அருகே தலைக்கவசம் அணிந்து சென்ற நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவம் பற்றி அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். சாலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் இந்த மரணம் நடந்து விட்டது. ஆகவே உடனடியாக சாலையை சரிசெய்ய வேண்டும் என்று கூறி மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து நகராட்சி, வருவாய்துறை, போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று சாலையை சரிசெய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.