பேரிகார்டு தடுப்புகளில் முள்வேலி – காவு வாங்க காத்திருக்கிறதா காவல்துறை?
பொதுவாக பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் என சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் எதிர்ப்பாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது வழக்கம். பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை கூற வரும் வேளையில் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்துவதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. அதிகமாக கூட்டம் கூடும் இடங்கள், ஆர்ப்பாட்டங்கள், போக்குவரத்தை சீர் செய்ய போராட்ட காலகட்டத்தில் காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் பல அமைப்பினரை கட்டுப்படுத்துவதற்கு இந்த பேரிகார்ட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது ஆளுயர பேரிகார்ட்டு தடுப்புகளில் முள்வேலி கம்பிகளை அமைத்திருப்பது காவல்துறையே உயிர் பலி வாங்க காத்திருக்கிறதா? என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினரால் வைக்கப்பட்டுள்ள ஆளுயர பேரிகார்ட்டு தடுப்புகளின் முன்பகுதியில் தோட்டங்களுக்கு வேலி அமைப்பதற்கு பயன்படும் முள்கம்பி வேயப்பட்டுள்ளன. போராட்ட காலங்களில் இந்த தடுப்புகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மீது விழுந்தால் ரத்த காயம் ஏற்படுவது நிச்சயம்.

இதுமட்டுமல்லாமல் திங்கட்கிழமை நடக்கும் குறை தீர்க்கும் முகாமில் மனு அளிக்க வந்த பெண்களின் துப்பட்டா முதற்கொண்டு அந்த கம்பியில் மாட்டிய அவலமும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறியது. ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள இந்த ஆளுயர தடுப்புகளில் முள்கம்பிகளை அகற்ற காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

உயிர்களைக் காக்கும் காவல் துறையே இப்படி உயிர் பலிக்கு துணை போகலாமா? பேரிகார்ட்களில் உள்ள முள் கம்பிகள் விரைவில் அகற்றப்படுமா? காவல்துறை இதனை கருத்தில் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo