தொட்டியத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க பூமி பூஜை
திருச்சி மாவட்டம் தொட்டியம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து அண்மையில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனிடம் பொதுமக்கள் நேரில் முறையிட்டனர். இந்நிலையில் தொட்டியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும்
தொட்டியம் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து தொட்டியம் காவிரி ஆற்றப்படுகையில் எரிவாயு தகன மேடை அமைத்திட நிலம் விலைக்கு வாங்கியது.
இதையடுத்து முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு பரிந்துரையின் பேரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்புதிய எரிவாயு தகன மேடை ரூ.1.38 கோடி மதிப்பில் அமைத்திட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, துணை தலைவர் ராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எரிவாயு தகன மேடை அமைக்க நிலம் வாங்கிட உதவி செய்த முக்கிய பிரமுகர்கள் 20 நபர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி, துணை தலைவர் சத்ய மூர்த்தி ,நகர செயலாளர் விஜய் ஆனந்த், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.