பட்ஜெட் தாக்கல்… தாக்குகிறதா திருச்சியை?…
தமிழக அரசின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று நடந்த தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். வருகிற நிதியாண்டில் துறைவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, மற்றும் செயல்படுத்தப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் குறித்தும் நேற்றைய பட்ஜெட் தாக்கலின் போது பேசினார் அமைச்சர் பிடிஆர், இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டால் திருச்சிக்கும், திருச்சி மக்களுக்கும் எந்த பயனும் இல்லை என்று திருச்சி மாவட்ட மக்கள் கூறுவது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதன்படி, நேற்றைய பட்ஜெட்டில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக
ரூபாய் 110 கோடி ஒதுக்கீடு செய்தது. திருச்சி மாவட்டத்தின் புண்ணிய திருத்தளமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது, திருச்சி மாநகராட்சி பொது இடங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக நவீன விடுதி கட்டப்படும் என்ற திட்டங்கள் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார் அமைச்சர் பிடிஆர்.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சியிலுள்ள 09 சட்டமன்ற தொகுதியில் அனைத்திலும் திமுக அரசே வென்றது. ஆனால் சென்னை,கோவை,சேலம்,மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த தொகுதிகளில் மட்டுமே திமுக வென்ற நிலையில், அம்மாவட்ட நலங்களுக்காக ஒதுக்கிய நிதியை விட திருச்சி மாவட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கிய அரசின் மேல் திருச்சி மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், பட்ஜெட் தாக்கலைப் பற்றி சமுக வலைதளங்களில் #திண்டாடும்_திருச்சி எனும் ஹாஸ்டேகுகள் வைரலாகி வருகிறது.