லால்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.
திருச்சி மாவட்டம் லால்குடி தெற்கு வீதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 59 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 600 க்கு மேற்பட்ட காளைகளும் 300 க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.
லால்குடி தெற்கு வீதியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் லால்குடி தெற்கு வீதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வழக்கம். இந்நிலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 59 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் வாடி வாசலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கால்நடை மருத்துவக் குழுவினரால் காளைகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், அரியலூர்,புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 600 க்கு மேற்பட்ட காளைகளும் 300-க்கும் மேற்பட்ட வீரர்களும் களத்தில் நின்றனர்.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கி ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விட்டனர்.இதில் ஒரு சில காளைகளை வீரர்கள் அடக்கினாலும் ஒரு சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கு மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.