தார் சாலை பணியால் நிறுத்தப்பட்ட பேருந்துகள் : பொதுமக்கள் கடும் அவதி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கொடும்பபட்டியில் இருந்து அயன் புதுப்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமானதால் புதிய தார் சாலை அமைக்கும் பணி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது.
பணிகள் மிகவும் மந்த கதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் புதுப்பட்டிக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நான்கு முறை இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் வருவதில்லை. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ – மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். இது மட்டுமின்றி ஜல்லிகள் கொட்டப்பட்டு உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளதுடன் கடந்த 4 நாட்களில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் உடல் நலமின்றி மருத்துவமனைக்குச்செல்லும் பொதுமக்களும் பேருந்து வராததால் மிகவும் சிரமமடைந்துள்ளனர். ஆகவே சாலை பணியை விரைந்து முடித்து பேருந்துகள் வழக்கம் போல் இயக்கி மாணவ – மாணவிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் காத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.