அகில இந்திய கபாடி போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் முதல் பரிசு பெற்றது

0 491
Stalin trichy visit

திருச்சி, ஏப். 28  மணப்பாறையில் நான்கு நாட்கள் நடைபெற்ற தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா கபாடிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை இன்கம்டாக்ஸ் அணியும், மகளிர் பிரிவில் பாலம் ஸ்போர்ட்ஸ் டெல்லி அணி முதல் பரிசு பெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அகில இந்திய அளவிலான கபாடி போட்டி மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுகிழமை வரை 4 நாட்கள் நடைபெற்றது. டெல்லி, மும்பை, ஹரியானா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். நான்காம்‌ நாள் போட்டியை கரூர் எம்பி ஜோதிமணி போட்டியை தொடங்கி வைத்து கபாடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இன்றைய இறுதி நாள் நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தஞ்சை மாவட்டம், கட்டக்குடி – இன்கம்டாக்ஸ் சென்னை அணிகளும் அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் ஆர்டன்ஸ் பேக்டரி டெல்லி – நாக்பூர் ரயில்வே அணிகள் மோதின. இதில் இன்கம்டாக்ஸ் சென்னை – ஆர்டன்ஸ் பேக்டரி டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
பெண்கள் பிரிவில் டெல்லி பாலம் ஸ்போர்ட்ஸ் – தமிழ்நாடு காவல்துறை அணிகளும் மற்றொரு ஆட்டத்தில் ஒட்டன்சத்திரம் எஸ்எம்விகேசி – தானே முனிசிபல் கார்ப்பரேசன் அணிகளும் மோதின. இதில் டெல்லி பாலம் ஸ்போர்ட்ஸ் – ஒட்டன்சத்திரம் எஸ்எம்விகேசி அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப் போட்டியை திமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்‌ மதிவாணன் துவக்கி வைத்தார். நள்ளிரவு 2 மணி வரை நடந்த போட்டியின் இறுதியில் ஆண்கள் பிரிவில் சென்னை இன்கம்டாக்ஸ் அணி முதல் பரிசும், டெல்லி ஆர்டன்ஸ் பேக்டரி இரண்டாம் பரிசும், கட்டக்குடி அணி, நாக்பூர் ரயில்வே அணிகள் மூன்று மற்றும் நான்காம் பரிசுகளை பெற்றன.
மகளிர் பிரிவில் பாலம் ஸ்போர்ட்ஸ் டெல்லி அணி முதல் பரிசும் இரண்டாம் பரிசை ஒட்டன்சத்திரம் எஸ்எம்விகேசி அணியும், தமிழ்நாடு போலீஸ், தானே முனிசிபல் கார்ப்பரேசன் அணிகள் மூன்றாம் மற்றும் நான்காம் பரிசையும் பெற்றன.

வெற்றி பெற்ற ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ 2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ 1.5 லட்சம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசாக தலா ரூ 75 ஆயிரமும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. அதேபோல பெண்கள் ஆணிக்கு முதல் பரிசாக ரூ 1.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ 1 லட்சம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசாக தலா 50 ஆயிரமும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. கபாடி போட்டியை திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கபாடி ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.