குழந்தைகள் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, பிப். 20 திருச்சி பாலக்கரை,காஜாபேட்டையிலுள்ள தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை,பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்க பள்ளி முதல்வர் புனிதா தலைமை வகித்தார். கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா, தாய்வீடு நிறுவன இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098, கல்வியின் அவசியம் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுப்பதில் மாணவர்களின் பங்கு முதலிய தலைப்புகளில் பேசினார்கள். மேலும் குழந்தைகள் என்போர் தாயின் கருவறை முதல் 18 வயது பூர்த்தியாகும் வரை உள்ளவர்கள் ஆவார்கள். அவர்களுக்கான நான்கு வகையான உரிமைகள்,குழந்தைகள் மீதான வன்முறைகளான குழந்தை திருமணம்,பாலியல் வன்முறை,குழந்தைத் தொழிலாளர்,குழந்தை கடத்தல்,பெண் சிசுக்கொலை மற்றும் குழந்தை நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், இளஞ்சிறார் நீதி சட்டம்,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் சட்டம் மற்றும் போதைப் பொருளினால் ஏற்படும் சமுதாய அளவிலான பிரச்சனைகள், போதை பொருள் பயன்படுத்துவதால் உடல் அளவில், மன அளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.