திருச்சி அருகே செல்போன் திருடிய 3 பேரை சுற்றிவளைத்த பொதுமக்கள்
கஞ்சா விற்றவர் கைது
திருச்சி ராம்ஜி நகரில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாகனம் மோதி மூதாட்டி பலி
சிறுகமணி புற்றுமாரியம்மன் கோவில் அருகே சாலையோரம் நடந்து சென்ற அடையாளம் தெரியாத 70 வயது மூதாட்டி அந்த வழியாக சென்ற வாகனம் மோதி படுகாயமடைந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டி யார்? அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் திருடிய 3 பேரை சுற்றிவளைத்த பொதுமக்கள்
வையம்பட்டியை அடுத்த எம்.துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது செல்போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. அந்த செல்போனில் ஜி.பி.எஸ். மற்றும் மொபைல் ட்ராக்கர் உள்ளிட்ட வசதிகளை அவர் ஏற்படுத்தி வைத்திருந்துள்ளார். இதனால் நண்பரின் செல்போன் எண் மூலம் அவரின் செல்போனை ட்ராக் செய்து பார்த்த போது அதே பகுதியில் உள்ள குளத்தின் அருகே இருப்பது தெரியவந்தது. உடனே கிராம மக்கள் பலரும் ஒன்று சேர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது ஊர் பொதுமக்கள் வருவதை பார்த்த அந்த 3 பேரும் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்த பொதுமக்கள் அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பிடித்து வையம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் துலுக்கம்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பாரதி என்ற ராஜா(28), அவரது தம்பி தினேஷ்குமார்(23), வெங்கடேஷ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo