திருச்சி மாவட்டத்தில் மூத்த அமைச்சர் – எம்.எல்.ஏ இடையே தொடரும் பனிப்போர்

0 701
Stalin trichy visit

திருச்சி, ஆக. 10 திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்நேருவிற்கும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சௌந்தரபாண்டியனுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே பனிப்போர் நிலவி வருகிறது.
கடந்த மாதம் லால்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய சென்ற போது சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனை மாவட்ட நிர்வாகம் அழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் தனது முகநூல் பக்கத்தில் லால்குடி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளது என அறிவித்து பதிவு செய்திருந்தார். இது திருச்சி மாவட்ட திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே லால்குடியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு தாமாகவே திறப்பு விழா செய்து வருகிறார் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன். இந்நிலையில் நேற்று புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கனூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தலைமையில் ஒன்றிய குழு தலைவர், ஒரு சில ஊராட்சி மன்ற தலைவர்களை வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

அதே இடத்தில் நேற்று பிற்பகலில் அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் மாவட்ட அலுவலர்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் தனது முகநூல் பக்கத்தில் காலையில் தன் தலைமையில் நடைபெற்று நிகழ்ச்சிக்கான புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். மாலையில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று இருந்த அந்த புகைப்படத்தையும் தனது புகைப்படத்தையும் பதிவு செய்து ஒரே நிகழ்ச்சி இரண்டுமுறை நடைபெற்று உள்ளது. இதுதான் திருச்சியின் நடைமுறை என நக்கலாக கலாய்த்து – பதிவு வெளியிட்டுள்ளார். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசு விழாவினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்துவதுதான் சரியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.