கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி ஆக.10 விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட வேண்டும், தொழிலாளர் நலச் சட்ட திருத்த தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், குறைந்தபட்ச சம்பளம் ரூ 26 ஆயிரம் வழங்க வேண்டும், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், மாநில அரசு துறை நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், அவுட்சோர்சிங்,காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிட வேண்டும் , 40 கோடி முறை சாரா தொழிலாளர்களுக்கு தேசிய சமூக பாதுகாப்பு நிதியத்தை உருவாக்கிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தொ.மு.ச பேரவை செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமையில் இன்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச பேரவை தலைவர் குணசேகரன்,தொமுச பேரவை பொருளாளர் ரவி, ஏ.ஐ.டி.யு.சிமாவட்ட தலைவர் நடராஜா, மாவட்ட செயலாளர் சுரேஷ், சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சீனிவாசன், ஐ.என்.டி.யு.சி.மாவட்ட தலைவர் வெங்கட்நாராயணன், ஐ.என்.டி.யு.சி அமைப்புசாரா மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.ஆறுமுகம், ஏ.ஐ.சி.சி.டி.யு.ஞான தேசிகன், எச்.எம்.எஸ் ஜான்சன்,எல்.எல்.எப் தெய்வீகன்,எல்.டி.யூ.சி கார்த்திகேயன் உள்பட 8 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 12-ந் தேதி திருவரங்கம் மற்றும் தென்னூர் பீமநகர் பகுதிகளில் பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது .இதையடுத்து 14-ந்தேதி மாலை6 மணிக்கு உறையூர் குறத்தெருவில் கலை நிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டம் என்று தெரிவித்துள்ளனர்.