“தஞ்சை தேர் விபத்து எதிரொலி” ஸ்ரீரங்கம் தேரோட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆய்வு!
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தார். நேற்று நெல்லளவு கண்டருளினார். இன்று (28ந்தேதி) காலை வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (29-ந் தேதி) நடைபெறுகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரை அடுத்த களிமேடு அப்பர் கோவிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு தேரோட்டம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 3 மணியளவில் மின்சாரம் பாய்ந்ததில் தேர் தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் படுகாயமடைந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்வத்துக்கு பிரதமர், குடியரசுத்தலைவர், உள்துறை

அமைச்சர், முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபோல் ஸ்ரீரங்கத்தில் நடந்துவிட கூடாது என்ற அடிப்படையில் இன்று காலை ஸ்ரீரங்கம் தேரையும், தேர் செல்லும் வீதிகளையும் மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்து மேலும் தகுந்த அறிவுரைகளை கூறினர். நாளை மறுநாள் (30-ந்தேதி) சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 1-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.