திருச்சி புனித வளனார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா
திருச்சி என்.சி.சி.-2 ஆர்மர்டு ஸ்குவாட்ரன் அணியை சேர்ந்த கேடட் அஸ்ரார் அஹமது, மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள இமாலய மலையேறும் பயிற்சிக்கூடத்தில் நடந்த பனி மலையேறும் என்.சி.சி. பயிற்சியினை வெற்றிகரமாக முடித்து தங்கப்பதக்கம் வாங்கியுள்ளார். 2-ம் பட்டாலியனை சேர்ந்த கேடட் ரஞ்சித், தேசிய அளவில் நடைபெற்ற ஜீவி மாவலாங்கர் நினைவு துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.
இதுபோல் கடந்த ஆண்டு தேசிய மாணவர் படையில் இருந்து பல சாதனைகள் புரிந்த இதர மாணவ-மாணவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய தேசிய மாணவர் படை ஆசிரியர்கள், அலுவலர்களுக்கும், கடந்த மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பில் திருச்சி குருப் என்.சி.சி. சார்பாக கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டு விழா திருச்சி புனித வளனார் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு திருச்சி சரக என்.சி.சி. தலைமை அதிகாரியான கர்னல் சி.இளவரசன் தலைமை தாங்கி சாதனையாளர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ், மெடல்கள் மற்றும் நினைவு பரிசை வழங்கி பேசினார்.