ஒன்றிய அரசைக் கண்டித்து தொடர் போராட்டம்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் பேட்டி
திருச்சி, ஆக. 28 தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்காவிட்டால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒன்றியஅரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசை ஏற்றுக் கொள்ளாததால், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த செல்லும் பொழுது, அவர்களை சந்தித்து பேச தேசிய கல்வி அமைச்சக அதிகாரிகள் மறுத்துவருகிறார்கள்.
பள்ளிக் கல்வித்துறைக்கு சுமார் ரூ.2000 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டியுள்ளது. மும்மொழி கொள்கையை நடைமுறை படுத்துவது உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி வழங்க முடியும் என ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்கிறது. நடைமுறையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பணியாற்றி வரும் வட்டார கல்வி வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும், பகுதி நேர ஆசிரியர்களுக்கும் 60 விழுக்காடு ஊதியத்தை ஒன்றிய அரசும், 40 விழுக்காடு ஊதியத்தை மாநில அரசு வழங்கி வருகிறது. தற்போது முழு ஊதியத்தையும் மாநில அரசே ஏற்று வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாட்டில் சிறப்பு ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை, வட்டார கல்வி வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்படப்போகிறது. இந்த ஊதியத்தை நம்பி பணியாற்றிக் கொண்டிருக்கும் சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதே போல மாணவர்களின் அறிவுசார் கலைத்திறன்களை போட்டிகள் மூலமாக வெளிக்கொண்டு வரும், கலை திருவிழாக்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் இத்தகைய ஊதியத்தை நம்பி பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பாதுகாக்கும் விதத்தில் உடனடியாக ஒன்றிய அரசு அந்த தொகையை தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படும். அதே போல ஓய்வூதியம் வாங்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்படும். சரண்டர் விடுப்பு தொகையையும் அரசால் வழங்க முடியாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் முடியாது.
ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் வைக்கும் போது, ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வந்து சேரவில்லை என பதில் வருகிறது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.