மாயமான சமையல் மாஸ்டர் சடலமாக மீட்பு

0 643
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சமயபுரம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் தனியார் அரவை மில் எதிரில் வசிப்பவர் சந்திரன்(65). இவரது மனைவி ராஜாமணி. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. சந்திரன் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக சந்திரனுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 26 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற சந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை.திடீரென மாயமானார். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சந்திரன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் சமயபுரம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள புதர் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது கால்நடையை தேடிச் சென்ற போது துர்நாற்றம் வீசியது. அருகில் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்த சடலம் கிடந்துள்ளது.மேலும் நாய்கள் தலையை கடித்து குதறியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவி சடலமாக கிடந்தது தனது கணவர்தான் என அடையாளம் காட்டியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சமையல் மாஸ்டர் எப்படி சடலமாக கிடந்தார், எதற்காக சாலையை விட்டு புதர் பகுதிக்கு சென்றார். தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா, என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.