ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவர் சடலம் நீண்ட தேடலுக்குபின் மீட்பு
திருச்சி, டிச. 30 மணப்பாறையில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவர் சடலம் 12 மணி நேர தேடுதலுக்கு பின் மீட்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி அருகே நேற்று மாலை ஒருவர் வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு இறந்து விட்டதாக மணப்பாறை ரெயில் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் உடனே திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தேடியும் உடல் கிடைக்காத நிலையில் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 12 மணி நேர தேடுதலுக்குப்பின் தண்டவாளத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள கழிவு நீர் தேங்கி இருந்த இடத்தில் உடல் கிடந்ததை கண்டு பிடித்து உடலை மேலே கொண்டு வந்தனர்.
இறந்தவர் சுமார் 60 வயது நிரம்பிய ஆண் என்பதும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக அந்த இடத்திற்கு சென்றார் என்ற விபரம் தெரியாத நிலையில் இறந்தவரின் உடலை திருச்சி ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.