சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
திருச்சி, ஆக.16 ஆடி மாத இறுதி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று இரவு முதல் அம்மனை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இதையடுத்து இன்று அதிகாலை நடை திறப்பு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சக்தி கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இதில் ஆடி மாதம் என்றால் அம்மன் கோயில்களில் பெண் பக்தர்கள் அம்மனுக்கு விசேஷமாக கருதி மஞ்சள் ஆடை அணிந்து தங்களின் நேர்த்தி கோயிலில் செலுத்தி வருகின்றனர்.
பொதுவாக ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடும் போது, இரண்டு விதமாக வழிபடலாம். பிரச்சனைகள் தீர வேண்டும் என்கிறவர்கள் ஒரு நேரத்திலும், வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற வேண்டும் என்கிறவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் வழிபடுவது மிக உயர்வான பலனை தரும். அதாவது, கடன் பிரச்சனை, தீராத நோய், வழக்கு தொடர்பான பிரச்சனைகள், கணவரால் பிரச்சனை, குடும்பத்தில் இருப்பவர்களால் பிரச்சனை, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் பிரச்சனை என ஏதாவது ஒரு பிரச்சனை தீர வேண்டும் என்பவர்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடலாம். வரவு வருவதில்லை, செல்வம் தங்குவதில்லை, மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும், வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்கிறவர்கள் ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வரும் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது பெண் பக்தர்களின் நம்பிக்கையாக கருதப்படுகிறது.
அதன்படி இன்று ஆடி மாதத்தில் வரும் இறுதி வெள்ளிக்கிழமை என்பதால் பல மாவட்டங்களில் இருந்து பெண்கள் விரதமிருந்து நடைபயணமாக சமயபுரம் கோயில்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு வந்தடைந்தனர்.
அப்படி வந்த பக்தர்கள் கோயிலை வெளி வளாகம், முடிகாணிக்கை மண்டபம், அன்னதானம் மண்டபத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி கும்மி அடித்து தங்களின் மகிழ்ச்சியான பக்தியை வெளிப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 30 மணியளவில் நடை திறந்ததும் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் தீச்சட்டி, பால்குடம், தீர்த்தக்குடம், கரும்பு தொட்டில், துலாபாரம், மற்றும் அழகு குத்தியும் நேர்த்திகடனை செல்லுத்தி சுமார் இரண்டு மணிநேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் கோயிலில் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உத்தரவின்படி கோயில் பணியாளர்கள் மற்றும் சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.