தி.மு.க. முப்பெரும் விழா : தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சி, ஆக. 29 திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகித்து உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கழகத்தின் முப்பெரும் விழாவினை நமது மாவட்டத்திலுள்ள மாவட்டம், மாநகரம், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழகங்களில் கழக கொடியேற்றியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மிகச்சிறப்பாக கொண்டாடுவது என்றும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை நமது மாவட்டத்திலுள்ள பல்வேறு நிருவாகிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் தலைவர் கலைஞர் நினைவினை அனைவரும் போற்றிடும் வகையில் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடுவது என்றும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கழக வேட்பாளர் மற்றும் தோழமைக்கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற செய்த கழக தோழர்களுக்கு நன்றியினை தெரிவிக்கின்றோம்.
இதேபோல் நடைபெற இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தலைமை கழகம் அறிவிக்கின்ற வேட்பாளர்களை உறுதியாக வெற்றிபெற வைத்து முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட செயலாளர் வைரமணி , பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.