மின்சாரம் தாக்கி முதியவர் பலி
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.
சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூர் குடித் தெருவைச் சேர்ந்தவர் 80 வயதான முத்துசாமி. இவர் இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டிற்கு வந்துள்ளார். அப்போது நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் எதிர்பாராதமாக காலால் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.