மின்கசிவால் விவசாயி, 8 ஆடுகள் உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 10 திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே கொணலை பகுதியைச் சேர்ந்தவர் சவரிமுத்து(58) விவசாயம் செய்து வரும் இவர் தனது தோட்டத்தில் ஆஸ்பட்டாஸ் சீட்டு கொட்டகை அமைத்து அதில் 50 மேல் வெள்ளாடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தோட்டத்தில் ஆடுகளுக்கு பாதுகாப்பாக சவரிமுத்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென ஆடுகள் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த சவரிமுத்து 8 ஆடுகள் மின்சாரம் தாக்கி ஒவ்வொன்றாக இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மற்ற ஆடுகளை காப்பாற்ற முயன்ற போது ஆட்டு கொட்டகையில் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்து சவரிமுத்தும் உயிரிழந்தார். இன்று காலை பக்கத்து தோட்டத்து உரிமையாளர் ஜான் பிரிட்டோ என்பவர் வந்து பார்த்தபோது சவரிமுத்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி சம்பவ இடத்திற்கு வந்து சவரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தோட்டத்தில் இருந்த மின் இணைப்பில் இருந்து ஆட்டுக்கொட்டகைக்கு எடுக்கப்பட்ட மின் இணைப்பு வயரில் மின்சாரக் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி சவரிமுத்து மற்றும் 8 ஆடுகள் உயிரிழந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைனிர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி இறந்த 8 ஆடுகளை பிரத பரிசோதனை செய்து சவரிமுத்து தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.