வீட்டுமனை பட்டா கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த என். பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அமையபுரம், வீ.பெரியபட்டி, முகவனூர் ஆகிய ஊராட்சிகளில் கூலி தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வையம்பட்டி ஒன்றிய செயலாளர் சண்முகானந்தம் தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் ஏ.ஐ.கே.எஸ் மாநில துணைச் செயலாளர் இந்திரஜித் சிறப்புறையாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் ஸ்டீபன் சேகர், சக்தி என்ற பழனிச்சாமி, சுந்தர்ராஜ், செல்லின் லீமா ரோஸி, ஜெயலட்சுமி, ராமசாமி, வீராசாமி, பெரியசாமி, ஆரோக்கியம், வேளாங்கண்ணி, அந்தோணியம்மாள், அம்மா கண்ணு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.