விவசாயிகள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

0 12
Stalin trichy visit

திருச்சி, செப்.17  விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
இரவு பகலாக நடந்து வருவதால் பரபரப்பு

பயிர் கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி திருச்சி அருகே விவசாயிகள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இரவு பகலாக அவர்களது போராட்டம் நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் சமயபுரம் பள்ளி விடை பாலம் சர்வீஸ் சாலை அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், உழவர் உரிமை இயக்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டுஇயக்கம், காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்பட 40 விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகதொடர்ந்தது. விவசாயிகள் இரவு பகலாக அங்கேயே முகாமிட்டு உள்ளனர். இதற்காக அங்கு மைதானம் போன்ற தனியார் இடத்தில் பந்தல் போடப்பட்டு உள்ளது. அவர்களுக்கு காலை, மதியம் இரவு என மூன்று நேரமும் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கோரிக்கைகளை விளக்கி அவ்வப்போது 40 சங்கங்களை சேர்ந்தவர்கள் பேசி வருகிறார்கள். காத்திருப்பு போராட்டம் குறித்து ஈசன் முருகசாமி கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. இதில் 19 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகள் தான் பயிர் கடன் வாங்கி இருக்கிறார்கள். இவர் கள் வாங்கி உள்ள மொத்த பயிர்கடன் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும். தேர்தல் கால வாக்குறுதி படி முழுவயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.

எங்களது கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து உள்ளது. அடுத்த கட்டமாக எங்களை சென்னைக்கு அழைத்து சென்று 5 துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி இருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போதும் எங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். எங்களது போராட்டம் அறவழியில் தான் நடைபெறும். போக்குவரத்து மற்றும் யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில் தனிடத்தில் தான் நடத்துகிறோம். ஆனால் போராட்டத்திற்கு வர இருந்த 12 சங்க நிர்வாகிகளை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

பயிர் கடன் வாங்கிய விவசாயிகள் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று ஜப்தி செய்வோம் என்றும், நகைகளை ஏலம் விடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டல் போக்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.