நெ.1 டோல்கேட் அருகே போலீசாரின் சி.சி.டி.வி. கண்காணிப்பு அறையில் தீவிபத்து
திருச்சி, பிப். 22 திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே போலீசாரின் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை திடீரென தீப்பற்றி எரிந்ததால் இரண்டு லட்சம் மதிப்பு உள்ள மின்சாதன பொருட்கள் எரிந்தது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா பகுதியானது திருச்சி, சென்னை, சேலம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்த ரவுண்டானா பகுதியில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் மற்றும் பயணிகள் வந்து சென்றுக் கொண்டிருக்கிறது.
கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் வாகன விபத்துகள், இரவு நேரங்களில் நடைபெற்று வந்த மணல் திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு.
ரவுண்டானாவின் மையப்பகுதியில் குற்ற கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா காட்சிகளை 24 மணி நேரம் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நாளடைவில் கொள்ளிடம் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த சில வருடங்களாக கண்காணிப்பு அறை திறக்கப்படாமல் பராமரிப்பு இன்றி பூட்டிய நிலையில் இருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறையில் தீப்பற்றி எரியத்தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ரவுண்டானா பகுதியில் இருந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையின் மற்றும் போலீசார் தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும் கண்காணிப்பு அறையில் பொருத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த எல்இடி டிவி மற்றும் சிசிடிவி கேமரா எக்யூப்மெண்ட்ஸ் உள்ளிட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் தீயில் கருகியது. தொடர்ந்து தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது கண்காணிப்பு அறையில் இருந்த மின்சாதனங்களில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது தெரியவந்தது.