திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

0 347
Stalin trichy visit

பண்டிகை தினங்கள் வந்துவிட்டாலே அதில் முக்கிய இடம் பெறும் பழம் மற்றும் பூக்கள் விலை அபரிமிதமாக உயர்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது ஆவணி மாதத்திற்கான திருமண முகூர்த்தங்கள் தொடங்கி சுபநிகழ்ச்சிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே திருச்சி மாவட்டத்தில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு வரும் பூக்கள் அனைத்தும் உடனுக்குடன் விற்று தீர்ந்து வருகிறது. இதனால் நேரம் செல்ல செல்ல பூக்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்பதால், விலையும் உயர்ந்து கொண்டே செல்லும் என்று தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி காந்தி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.200-க்கு விற்பனையானது. இன்று 800 முதல் 1,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.100-க்கு விற்பனையான சம்மங்கி, இன்று 250 ரூபாய்க்கு விற்பனையானது. ஜாதி மல்லி இன்று கிலோ 1000 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை ரூ.150-க்கும், ரோஜா ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், பிச்சிப்பூ ரூ.150-200, செவ்வந்தி ரூ.150-200, மரிக்கொழுந்து ரூ.40-50, அரளிப்பூ ரூ.280-320 என்ற விலையில் இன்று விற்பனையானது.
பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, விநாயகர் சதுர்த்தி ஒருபுறம் இருந்தாலும், தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு காரணமாகி விட்டது. மல்லிகை, கனகாம்பரம், பிச்சிப்பூ உள்ளிட்டவை திருச்சி மாவட்டம் புலியூர், எட்டரை, கோப்பு, முதலைப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து வருகிறது. முல்லைப்பூ, ஜாதிப்பூ விலையேற்றத்திற்கு கேரள ஓணம் பண்டிகைக்கு அதிக அளவில் அனுப்படுவதே காரணமாகும். இந்த விலையேற்றம் ஒருசில நாட்கள் நீடிக்கும் என்றார். அதேபோல் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-ல் இருந்து ரூ.450 முதல் 500 வரையும், ரஸ்தாளி, செவ்வாழை பழங்களும் கணிசமாக உயர்ந்துள்ளது. அத்துடன் கரும்பு, பொரி விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.