முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கார் திருட்டு வழக்கில் 2 பேர் கைது; கார் பறிமுதல்

0 505
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை இந்திரா நகரில் வசித்து வரும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சின்னச்சாமியின் கார் வீட்டின் முன்பு உள்ள தாழ்வாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி காலை வீட்டில் உள்ளவர்கள் எழுந்து பார்த்த போது கார் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சின்னச்சாமி மணப்பாறை போலீசீல் புகார் அளித்திருந்தார்.

அதே நாளில் பல்வேறு இடங்களில் 3 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன், ஒரு லேப்டாப்பும் திருடுபோயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மூர்த்தி மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ஜனனி பிரியா, தலைமையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் அடங்கிய போலீசார் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட செல்போன் ஒன்று திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் விற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த செல்போனை விற்றவர் யார்? என்ற விபரத்தை போலீசார் பார்த்த போது திண்டுக்கல்லை சேர்ந்த கோபிநாதன் என்பவர் விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் தேடிய போது தலைமறைவாக இருந்துள்ளார். மேலும் தொடர் விசாரணையில் தான் திண்டுக்கல் மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார்(வயது 20), சென்னம்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாரதிகண்ணன் (19) உள்ளிட்ட 6 பேர் கூட்டாக சேர்ந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து ஒரு காரை எடுத்து வந்து மணப்பாறை பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மனோஜ்குமார் மற்றும் பாரதிகண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த மணப்பாறை போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கார், 3 இருசக்கர வாகனங்கள், ஒரு லேப்டாப், 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் ஓசூர் பகுதியில் பதிவெண்ணை மாற்றி நிறுத்தி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்த நிலையில் காரையும் மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் எடுத்து வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.