சுத்திகரிக்காமல் திறக்கப்படும் ஆவின் நிறுவன கழிவுநீரால் துர்நாற்றம் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

0 259
Stalin trichy visit

ஆவின் நிறுவன கழிவுநீரை சுத்திகரிக்காமல் கால்வாயில் திறப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட புதுக்கோட்டை சாலையில் ஆவின் பால் பண்ணை, அரசு வாகன பணிமனை, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் போன்றவை அமைந்துள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் ஜெயில் கார்னரில் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள செங்குளம் கால்வாயில் கலக்கிறது. செங்குளம் நோக்கி செல்லும் இந்த கால்வாயில் தண்ணீர் சரிவர செல்லாததாலும், ஹைவேஸ் காலனி மற்றும் அப்பகுதியை குடியிருப்பு வாசிகள் பலர் கால்வாய் கரையோரம் குப்பைகள் கொட்டுவதாலும், கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து வந்த புகாரை தொடர்ந்து, கால்வாயில் கழிவுகளை அகற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கடந்த வாரம் அந்த கால்வாயில் இருந்த குப்பைகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினார்கள். இதை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அந்த பகுதியை சுத்தமாக பராமரிக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர். கடந்த 2 வாரத்துக்கு முன்புதான், அந்த கால்வாய் தூர்வாரப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டன. ஆனால், மீண்டும் குப்பைகள் அடித்து வரப்பட்டு, அங்கு சேர்ந்துள்ளன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. குறிப்பாக ஆவின் பால் பண்ணையில் இருந்துதான் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் குழாய் வழியாக அரசு பணிமனை அருகே சாக்கடையில் திறந்து விடுகிறார்கள். இதனால், தான் கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். கடந்த ஆண்டு கொட்டப்பட்டு குளத்தில் இருந்து ஆவின் கழிவுநீர் குழாய் மூலம் தான் இந்த கால்வாய்க்கு தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அனுப்பினார்கள் என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சுத்திகரிக்கப்படாமல், கழிவுநீரை கால்வாயில் திறந்து விடுவதை கண்டுகொள்வதில்லை என்றும், எனவே, இதுபற்றி உரிய விசாரணை நடத்தி, கால்வாயில் கழிவுநீரை திறந்து விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.