பைக் மீது அரசு பேருந்து மோதல் : 4 வயது குழந்தை உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 28 திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் -(30). இவர் குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில்
வளநாடு அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டு மீண்டும் அவரது சொந்த ஊரான துலுக்கம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை வளசப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்குப் பின்னால் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் கண்ணதாசன் அவரது மனைவி கனகலட்சுமி (27) ,மகன் கிருத்திக் ரோஷன் – (6)
மகள் சுகன்யா – (3) மற்றும் சுஜிதா (4) ஆகிய ஐந்து பேரும் பேருந்து மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுஜிதா பேருந்து சக்கரத்தில் மாட்டி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.உடனடியாக காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபத்தில் சிறுமி தலை நசுங்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.