ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
திருச்சி, ஜூலை 28 பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி பொறுப்பேற்றதும் விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறி தரவில்லை, தென்னிந்திய நதிகளை இணைப்பேன் என்று கூறி இதுவரை இணைக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வந்த பிரதமர் மோடியின் கவனத்திற்கு செல்ல திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்த போது போலீசாருக்கும் – விவசாய சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலையோரம் தங்களின் கோரிக்கை குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் பேசினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது தங்களை கைது செய்தால் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும், மாலை வரை மண்டபத்தில் தங்க வைத்து விட்டு அனுப்பினால் கண்டிப்பாக செல்ல மாட்டோம் என்று கூறினர். இருப்பினும் போலீசார் மறியலில் ஈடுட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.