தமிழ்நாடு அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறும் ஆளுநர் : திருநாவுக்கரசர் பேட்டி

0 306
Stalin trichy visit

திருச்சி, ஏப். 26  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு, திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி அருணாச்சல மன்றத்தில் இருந்து காந்தி சிலை வரை மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது . ஊர்வலத்தின் இறுதியில் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அருணாச்சலம் மன்றத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் வேலுச்சாமி, பெனட் அந்தோணி ராஜ் மாநில பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் பொருளாளர் முரளி மலைக்கோட்டை கோட்டத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசர்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா சென்றிருந்த நான்கு பேர் காட்டுமிராண்டித்தனமாக நீங்கள் யார் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்றெல்லாம் விசாரித்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் இது கண்டனத்திற்குரிய செயல் . அமைதியை விரும்பக்கூடிய மக்களிடத்தில் இது மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. உலகின் பல நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவிற்கு துணை நிற்போம் என கூறியுள்ளனர். பாகிஸ்தானில் ராணுவம் பலவீனப்படுகிற போது , ஆட்சி பலவீனப்படுகிற போது , பாகிஸ்தானில் மக்களிடம் அமைதி இல்லாத போது, பாகிஸ்தான் மக்களை திசை திருப்ப இந்தியாவிற்குள் இது போல் ஊடுருவி படுகொலைகளை ராணுவத்தின் துணையுடன் தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதை இந்திய மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.
தீவிரவாதத்தை வேரோடு அழித்திட மத்திய அரசு எடுத்து வருகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம். காங்கிரஸ் கட்சி தனது முழு ஒத்துழைப்பை மத்திய அரசுக்கு அளிக்கும்.

பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதை இன்னும் தீவிரப்படுத்தி இந்திய மக்கள் மகிழ்ச்சியடைய கூடிய வகையில் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் அவர்களுடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் மத்திய உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தில் தாக்குதல் நடந்திருப்பது கேள்விக்குரியது. அந்தப் பகுதியில் ராணுவம் கொஞ்சம் கூட இல்லையா? இது முற்றிலும் மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்விதான். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்று தார்மீகமாக பதவி விலக வேண்டும் என்று கேட்பதில் தவறில்லை என்றார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு பிறகு ஆளுநர்களை நியமிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு வந்து விட்டது. முதலமைச்சர் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் செயல்படுவார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆளுநர் அரசுடன் போட்டி போட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு அவசர அவசரமாக ஒரு கூட்டத்தை கூட்டி துணை வேந்தர்களை அழைத்து இந்தியாவின் துணை ஜனாதிபதியை சந்தித்து அழைத்து வந்து நிகழ்ச்சியை இவ்வளவு வேகமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன உள்ளது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு போட்டி போடுகின்ற நிலையில் ஆளுநர் தொடர்ந்து செயல்படுகிறார் என்பதன் அடையாளம் தான் இந்த அவசரமாக கூட்டப்பட்டிருக்கிற துணைவேந்தர்களுடைய கூட்டமாகும். இது ஜனநாயக ரீதியாக முறையானது அல்ல, சரியானது அல்ல, துணை ஜனாதிபதியும் கவர்னர் அழைத்தார் என்பதற்காக முதலமைச்சர் அழைக்காத போது கல்வி அமைச்சர் அழைக்காத போது வந்திருப்பது மாநில மக்களின் உணர்வுகளை, மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உணர்வுகளை மதிக்க வேண்டியதும் அவருடைய பொறுப்பாகும் . அந்த விதத்தில் ஏட்டிக்கு போட்டியாக நடைபெறுகிற இந்த துணைவேந்தர் கூட்டம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. இது அனாவசியமாக மோதலை உருவாக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கிறது.

ஆளுநர் சும்மாவே இருக்க மாட்டார் என நினைக்கிறேன். அவர் திரும்பி செல்லும் வரை இது மாதிரி ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறார். எந்த போலீஸ்காரர் எந்த துணை வேந்தரை எங்கு மிரட்டினார். அதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா அவரால் நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்கள் முதலமைச்சரை மீறி ஆளுநர் அழைக்கிறார் என்பதற்காக செல்ல முடியுமா.

ஆளுநர் கண்ட்ரோலில் இருந்த போது துணை வேந்தர்கள் அவர் அழைத்த போதெல்லாம் சென்று கொண்டு தானே இருந்தார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பின் ஆளுநர் வேண்டுமென்றே கூட்டம் கூட்டும் போது அவர்கள் போய் கலந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை . அதற்காக காவல்துறையினர் மிரட்டி விட்டார்கள் என கூற முடியுமா…. அப்படி அங்கு கலந்து கொண்டவர்கள் என்ன ஆளுநர் மிரட்டியா சென்றார்கள் என கேள்வி எழுப்பினார்

விரும்பியவர்கள் சென்றிருப்பார்கள் அது அவர்களது எண்ண ஓட்டத்தை பொறுத்தது. அவர்கள் சட்டத்தை விதிகளை எப்படி அவர்கள் எடுத்துக் கொள்கிறார்களோ அதை பொறுத்து இருக்கிறது. யாரும் யாரையும் மிரட்டி அழைத்துச் செல்லவில்லை என்றார்.

Leave A Reply

Your email address will not be published.