கல்லூரி மாணவர் கின்னஸ் சாதனை!
திருச்சி மாவட்டம், சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு மின் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் விக்னேஸ்வரன் உலகின் மிகப்பெரிய பிபோனாசி ஸ்பைரல் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கணிதத் துறை பேராசிரியர் வெங்கடா ஜலபதி அறிவுரையின்படி கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி 12 பேர் குழு அமைத்து, 20,128.51 சதுர அடி அளவுள்ள பிபோனா சிஸ்பைரலை சுமார் 8 மணி நேரம் 15 நிமிடங்களில் வரைந்து இதற்கு முந்தைய சாதனையாக இருந்த 4746.88 சதுர அடி சாதனையை முறியடித்தார்.
மாணவரின் இச்சாதனையை பாராட்டி, கல்லூரி முதல்வர் தேவராசு சீனிவாசன் உலக கின்னஸ் சாதனை சான்றிதழை வழங்கினார். பேராசிரியர் காமராஜ், கணிதத்துறை தலைவர் முத்துபெருமாள், பேராசிரியர் வெங்கடா ஜலபதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.