ஜன.6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருச்சி, டிச.6 ஜாக்டோ ஜியோ சார்பில் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி
திருச்சியில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நடத்த உள்ள தொடர் வேலை நிறுத்த போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன்,
ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும், சத்துணவு பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அரசு எங்கள் போராட்டங்களுக்கு செவி சாய்க்கவில்லை எனவே எங்கள் மாநில குழுவில் எடுத்த முடிவின்படி வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் அது குறித்து உயர்மட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள். வேலை நிறுத்த போராட்டத்திற்கு முன்னதாக டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆயத்த மாநாடு நடத்தப்படும். 13 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் தேர்வுகளுக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் எங்களுடைய போராட்டங்கள் இருக்கும்.
நாங்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஆயத்த மாநாடுகளை சனிக்கிழமை தான் நடத்துகிறோம். இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் தொடர் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்துவது வேறு வழியில்லாமல் நடத்துகிறோம். எங்கள் போராட்டங்களுக்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எங்கள் போராட்டங்களுக்கு செவி சாய்த்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.