திருச்சி மாநகரில் குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

0 460
Stalin trichy visit

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் திருச்சி கலையரங்கில் நேற்று மாலை நடந்தது. குழுவின் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை மற்றும் 42 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் இதுவரை முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், நிதி ஒதுக்கீடு போன்ற விவரங்களை கூறினார்கள். அப்போது இடையிடையே மாவட்ட கலெக்டர் சிவராசு குறுக்கிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேசுகையில், “திருச்சியில் காவிரி, கொள்ளிடம் ஆகிய 2 இடங்களில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் பல இடங்களில் குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். ஆகவே பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதிகாலை 4 மணிக்கே குடிநீர் வினியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் இதற்காக அவசர, அவசரமாக எழுந்து தண்ணீர் பிடிக்க செல்கிறார்கள். ஆகவே தண்ணீர் வினியோகிக்கும் நேரத்தை சற்று கூடுதலாக வழங்கலாம்” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “ரேஷன்கார்டு பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்டதுறைக்கு இதுவரை 412 மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எதற்கும் பதில்அளிக்கவில்லை. ரேஷன்கடைகயில் பொருட்களை எடைபோடும் போது, சம்பந்தமில்லாத நபர்கள் ரேஷன் கடையில் பொருட்களை எடைபோடுவதாக புகார் வருகிறது. அது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கூட்டத்துக்கு பிறகு திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் தொடர்பாக இதுவரை 4 முறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசி உள்ளேன். தற்போது கோப்பு மத்திய மந்திரியிடம் ஆணைக்காக உள்ளது. முன்பெல்லாம் ராணுவ இடத்தை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை. ராணுவ இடத்துக்கு பெற்று கொண்டு அதற்கு மாற்று இடத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும். அந்த இடம் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருக்க வேண்டும். தற்போது இது கடைசி கட்டத்தில் உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

மோடியின் பலத்தை ராகுல்காந்தி உணராதவரை அவர் வெற்றி பெற முடியாது என பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதை ஏற்க இயலாது. ராகுல்காந்திக்கு மோடியின் பலமும் தெரியும், பலவீனமும் தெரியும். அவர் யாரிடமும் போய் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் உறவு எந்தஅளவுக்கு சுமூகமாக இருந்ததோ, அதுபோல் உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும். அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினைகளில் கருத்து மோதல்களில் ஈடுபடுவது பழைய அ.தி.மு.க. தொண்டர்களுக்கு வருத்தமாக தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.