குண்டர்களை வைத்து மிரட்டல்: பள்ளி நிர்வாகி மீது பா.ஜ.க. பிரமுகர் குற்றச்சாட்டு
திருச்சி, நவ. 16 திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் மூன்றாவது குறுக்கு சாலையில் சொந்தமான ஏபிசி மாண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது. இந்த வளாகத்தை கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்தும், 6 மாத வாடகையும் தராமல், பா.ஜ.க.வின் ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் சூரியசிவா மற்றும் அவரது மனைவி அத்தினா கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கடந்த இரண்டாம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் சூரியசிவா மற்றும் அவரது மனைவி அத்தினா ஆகிய இருவரும் திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூரிய சிவா தன்மீது கொடுக்கப்பட்ட புகாரில் உண்மை இல்லை என்றும். ஆர்த்தி மற்றும் அவரது கணவர் இணைந்து பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து குண்டர்களை வைத்து தங்களை மிரட்டியதாக ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்துள்ளதாகவும் கூறினார். என் மீது எப்படியாவது வழக்கு தொடர வேண்டும் என்ற நோக்கில் யார் புகார் கொடுத்தாலும் உடனடியாக அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பது போல் வழக்கு என் மீது ஜோடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சியாகிய திமுகவை நான் தொடர்ந்து விமர்சிப்பதால் என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு காவல்துறை செயல்படுவதாகவும் இந்த பள்ளி வளாக கட்டிடம் தொடர்பான புகாரிலும் இதே போன்று என் மீது காவல்துறை திட்டமிட்டு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.