மின்சாரம் தாக்கி ஐடிஐ மாணவர் உயிரிழப்பு : இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, ஜன.29 முசிறியில் சோகம் – புதிய கட்டிடத்திற்கு மின்விளக்கு அலங்காரம் செய்த போது மின்சாரம் தாக்கி ஐடிஐ மாணவர் உயிரிழப்பு.
உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி திருச்சி – நாமக்கல் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம் முசிறியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
முசிறியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் என்பருக்கு சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டிடத்தின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மாலை கட்டிடத்திற்கு மின்விளக்கு அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்போது, அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்த பைத்தம்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஐடிஐ இரண்டாம் ஆண்டு மாணவர் கருணா (வயது 20) என்பவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.
இதில் நிலைதடுமாறி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த கருணாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி கருணா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் தரப்பிலிருந்து உரிய இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கருணாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று முசிறி கைகாட்டி பகுதியில் திருச்சி – நாமக்கல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி காவல் ஆய்வாளர் செல்லதுரை மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு காவல் நிலையம் சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி – நாமக்கல் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.