லாரி மோதி குதிரை படுகாயம்; பாதுகாக்க பொதுமக்கள் வேண்டுகோள்!
திருச்சி மாநகரில் ஆங்காங்கே சாலைகளில் குதிரைகள், கால்நடைகள் சுற்றித்திரிவதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்பது தொடர் கதையாக இருப்பினும் மாநகராட்சி சார்பில் கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பன உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதனை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள நேஷனல் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற ஒரு ஆண் குதிரையை அந்த வழியாகச் சென்ற லாரி மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அந்த குதிரை அருகில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த
அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து உடனே கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த குதிரைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து கயிறு மூலம் அந்த குதிரையை பொதுமக்கள் உதவியுடன் சரக்கு வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக பாலக்கரையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்தக் குதிரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடியதால் திருச்சி-திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து

பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், சாலைகளில் குதிரைகள், கால்நடைகள் சுற்றி தருவதுடன் சாலையிலேயே அவைகள் படுத்து உறங்குவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள், குதிரைகளை மீட்டு பாதுகாக்க வேண்டும் என்றனர்.