திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார்துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளது.
மேலும் இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, செவிலியர், இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் போன்ற மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு ( Bio – data ), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.