வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைக்கு பணம் கட்டியும் நகையை திரும்பித் தராததால் முற்றுகை போராட்டம்
வையம்பட்டியை அடுத்த தவளவீரன்பட்டி அருகே கிருஷ்ணகவுண்டனூரைச் சேர்ந்த ராகவன் என்பவர் என்.பூலாம்பட்டியில் உள்ள வங்கி ஒன்றில் 20 கிராம் நகையை அடமானம் வைத்து 27 ஆயிரம் பணம் பெற்றதாக கூறப்படுகின்றது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் ராகவன் இறந்து விட்ட நிலையில் அவரது மனைவி வங்கிக்கு சென்று பணத்தை செலுத்தி நகையை திருப்ப முயன்றார். இதுமட்டுமின்றி கடந்த மாதம் 13ம் தேதி 28,538 ரூபாய் பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகின்றது. கணவன் இறந்து விட்ட நிலையில் மிகுந்த மனவேதனையோடு இருந்த அந்தப் பெண் நகைக்கான தொகையை செலுத்தியும் திரும்பித் தராததால் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட வங்கி மேலாளரை கண்டித்து வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் சண்முகானந்தம் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் வையம்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.