திருச்சி யூனியனில் பலகோடி முறைகேடு: கணக்கர் சஸ்பெண்ட்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மற்றும் மணிகண்டம் யூனியன் அலுவலகத்தில் கடந்த 2017 அம் ஆண்டில் இருந்து கணக்கராக பணியாற்றி வருபவர் கனி(51). இந்நிலையில் யூனியனின் 2022–23ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், அதில் ஒன்றரை கோடி ரூபாய் வரை நிதி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, கணக்கர் கனி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இவர் அங்கு கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து கணக்கராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பழைய கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் அவர் ஒவ்வொரு வருடமும், அந்த யூனியனுக்கு என்று ஒதுக்கப்படும் எம்.எல்.ஏ நிதி, எம்.பி நிதி உள்ளிட்டவற்றில் போலியாக கணக்கெழுதி தன்னுடைய மனைவி, மகன், என்று உறவினர்களின் வங்கி கணக்கில் போட்டுள்ளார்.
அதில் 2017க்கு பிறகு ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் 30 லட்சம் வரை போலி கணக்கு எழுதியது தெரிய வந்துள்ளது. அவர் இந்த யூனியனில் பணியில் இருந்த காலத்தில் முதலில் ஒரு 30 லட்சம், அடுத்து 65 லட்சம், தற்போது 1.50 கோடி என கையாடல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிதிமுறைகேடு குறித்து வெளியே தெரியாமல் இருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டின் வரவு செலவு தணிக்கையில் சிக்கி உள்ளார்.
ஆனால் இந்த முறை 2022 – 2023 வரவு செலவு கணக்கில் அரசு ஒப்பந்தக்காரர்களின் வைப்புத் தொகை, ஒப்பந்தகாரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை மற்றும் சரக்கு வரி (GST) ஆகியனவற்றை உரிய வங்கி கணக்குகளில் செலுத்தாமல், தனது மகனின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். அவ்வாறாக கையாடல் செய்த பணத்தில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில், கனி தனக்கு சொந்தமாக வேங்கூர் பகுதியில் வீடு கட்டி வருகிறார். இவை அனைத்தும் கணக்கு தணிக்கை குழுவினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனால் அதற்கு முன்பு உள்ள நிதி ஆண்டுகளில் நிதி முறைகேடு செய்துள்ள கனிக்கும், அன்றை காலகட்டங்களில் அங்கு பல்வேறு நிலைகளில் பணியாற்றிய பிடிஓ, உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இதில் பங்குள்ளதாக கூறப்படுகிறது. எனவே கடந்த ஆண்டுகளில் இந்த யூனியன் சார்பில் வழங்கப்பட்ட கணக்கு வழக்குகளை அதிகாரிகள் குழு தணிக்கை செய்தால், இன்னும் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த முறை கனி மாட்டியதால், முன்பு இங்கு பணியாற்றி தற்போது வேறு இடங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கனியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தன்மீது நடவடிக்கை பாயும் என்பதை அறிந்த கனி, சில நாட்களாக அலுவலகத்துக்கு வராமல் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை தற்போது கைது செய்துள்ளனர். இவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் வெளியே அறிவிக்கப்பட்டது. ஆனால் இவர் கைது செய்யப்பட்ட விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக திட்ட இயக்குநர் தேவநாதன் எஸ்.பி அலுவலகத்தில் பேசி கைது செய்யப்பட்டது வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல் தேவநாதனிடம் தற்போது கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் லலிதா தான் ஏற்கனவே இந்த யூனியனில் பிடிஓவாக பணியாற்றி உள்ளார். தற்போது கலெக்டரிடம் எழுத்துப்பூர்வமாக கனி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் இந்த யூனியன்களில் முன்பு பிடிஓக்களாக பணியாற்றிய ஒருசிலரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அதில் முதலில் இருப்பது இந்த லலிதா தான், அந்த லலிதாவை காப்பாற்ற வேண்டும், அவரது பெயர் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், காவல்துறை எஸ்.பி. அலுவலகத்தில் தேவநாதன் பல முயற்சிகள் எடுத்துள்ளார்.
எனவே கடந்த 2022-2023க்கான கணக்கிலேயே இவ்வளவு ஊழல் இருந்தால், இதற்கு முன் அவர் பணியாற்றிய ஆண்டுகளில் எவ்வளவு கோடி மோசடி செய்திருக்க வேண்டும். தன்னுடைய மனைவி, மகன், என்று ஒவ்வொருவருடைய பெயரிலும் தனியாக வங்கி கணக்கு தொடங்கி அந்த கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஒரு யூனியன் அலுவலகத்திலே இத்தனை கோடி ஊழல் செய்திருக்கும்போது, தமிழ்நாட்டில் உள்ள யூனியன் அலுவலகங்களில் நிலை குறித்து அறிந்துகொள்ள இந்த ஒரு சம்பவம் போதும், எனவே இந்த யூனியன் ஊழல்களை கண்டறிய உடனடியாக ஒரு தனிக்குழு அமைத்து இந்த யூனியனில் ஏற்கனவே செய்யப்பட்ட கையாடல்கள் குறித்து உடனடியாக ஆய்வு நடத்தினால், இன்னும் பல அதிகாரிகள் இதில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.