ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 37 பவுன் நகை, 40 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அன்பழகன்(வயது 67). இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(61). இந்நிலையில் அன்பழகனும், அவரது மனைவியும் கடந்த 27-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சி கே.கே. நகரில் உள்ள தங்களது மகன் வீட்டுக்கு சென்றனர். இதையடுத்து நேற்று மாலை அவர்கள் துறையூரில் உள்ள வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தன. ஒரு பீரோ கீழே சாய்ந்த நிலையில் கிடந்தன. மேலும் பீரோக்களில் வைத்திருந்த ஆரம், வளையல், காப்பு, மோதிரம் உள்பட 37 பவுன் நகைகளையும், ரூ.40 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின், துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் மூலம் துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அன்பழகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.