தேசிய மக்கள் நீதிமன்றம்; 11-ந் தேதி நடக்கிறது
தேசிய மக்கள் நீதிமன்றம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் 11-ந் தேதி(சனிக்கிழமை) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி நடைபெற உள்ளது. திருச்சி நீதிமன்றங்களில் 5 அமர்வுகளிலும், லால்குடி, மணப்பாறை, துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு மக்கள் நீதிமன்ற அமர்வுகளிலும் என மொத்தம் 10 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் வழக்குகள் தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து பேசி சமரச தீர்வு காணப்படும்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரிய வழக்குகள், தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் நஷ்டஈடு கோரிய வழக்குகள், அரசு நில ஆர்ஜீத சம்பந்தப்பட்ட இழப்பீடு போன்ற வழக்குகளில் சமரச முறையில் தீர்வு காணப்படும். மேலும், வங்கிகளின் வாரா கடன் வழக்குகள் மற்றும் காசோலை மோசடி வழக்குகளும் ஆக மொத்தம் சுமார் 13265 வழக்குகளுக்கு மேல் சமரச முறையில் தீர்வுகாண பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளன.
தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) கிளாட்ஸ்டோன் பிளெசட் தாகூர் உத்தரவின்பேரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தலைமையில் செய்து வருகிறார்கள்.