மண்ணச்சநல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் – சட்டசபையில் கன்னி உரையில் எம்எல்ஏ கதிரவன் கோரிக்கை

0 743
Stalin trichy visit

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரில் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ எஸ் கதிரவன் தனது கன்னி உரையில் தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது…..மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை திருத்தலையூர்ஏரி, சித்தாம்பூர் ஏரி, கோமங்கலம் ஏரி, நெய்வேலி ஏரி, திருத்தியமலை ஏரி, புலிவலம் ஏரிகளுக்கு மின்மோட்டார் மூலமாகவோ அல்லது பாசன வாய்க்கால் அமைத்தோ தண்ணீர் கொண்டுவர வேண்டும். இவ்வாறு செய்தால் இப்பகுதியில் உள்ள 50 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

விவசாயம் செழிக்கும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் சமயபுரம் முதல் மண்ணச்சநல்லூர் வரை மற்றும் நொச்சியம் முதல் மண்ணச்சநல்லூர் வரை சாலைகளை நான்கு வழிச்சாலை ஆக தரம் உயர்த்தி தரவேண்டும். மேல் பத்து ஊராட்சியில் மயானத்திற்கும், விவசாய நிலங்களுக்கும் செல்லும் வகையில் வாய்க்காலில் பாலம் கட்டித்தர வேண்டும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் சமயபுரம், ஓமாந்தூர், உத்தமர் கோவில், திருவெள்ளறை, திருவாசி, திருபைஞ்சீலி, திருப்பட்டூர் உள்ளிட்ட பல திருக்கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், கழிப்பிட வசதிகள், குடிநீர் தொட்டிகள், நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். திருவெள்ளறை மற்றும் சிறுகனூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும். கொணலை, ஓமாந்தூர், பெரகம்பி ஊராட்சிகளில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். ஓமாந்தூர் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவுக்கு தனி கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் அரசு கல்லூரிகள் இல்லாததால் மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்துத்தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டதாரி இளைஞர்கள் வேலையின்றி இருப்பதால் தொழிற்பேட்டை அமைத்து தரவேண்டும். மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவெள்ளறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை மாதிரி மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தரவேண்டும்.

நெய்வேலி, காட்டுக்குளம் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். திருத்தியமலை, திருவெள்ளரை, பூனாம்பாளையம் ஊராட்சிகளில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரவேண்டும். திருவாசி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிக்கு கழிவறை வசதி செய்து தர வேண்டும். எதுமலை கிராமத்தில் வேளாண் துணை விரிவாக்க மையம், கொடுங்குழை ஊராட்சி பெரிய கொடுந்துறையில் தானிய சேமிப்பு கிடங்கு கட்டித்தர வேண்டும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் மாணவ மாணவிகள், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த விளையாட்டு கலை க்கூடம் அமைத்து அதற்கு டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரை சூட்டவேண்டும். கரியமாணிக்கம் ஊராட்சியில் வாத்தலை முக்கொம்பு மேலணையில் உள்ள உயிரியல் பூங்காவை மேம்படுத்தி தீம்பார்க் அமைத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்பறை, ஜெயங்கொண்டான் ஊராட்சிகளில் சமுதாயக் கூடம் அமைத்து தர வேண்டும்.

திருச்சி மாவட்டம் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளதால் உப்பிலியபுரம் பச்சமலை தொட்டியம் பகுதி மக்கள் மக்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு தேவைகளுக்கு நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே,திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்து திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரித்து மண்ணச்சநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைத்துத் தர முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது கன்னி உரையில் தொகுதி மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.