ஜவகர் சிறுவர் மன்றங்கள் சார்பில் ஒருநாள் ஓவியப்பயிற்சி முகாம்!
உலக ஓவிய தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் 5வயது முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் ஓவியப்பயிற்சி முகாம் ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் உள்ள திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு, மரபுசார்ந்த ஒவியங்களை ஜவகர் சிறுவர் மன்ற திருச்சி ஆசிரியர் பெரியண்ணன், துணி ஓவியங்களை தஞ்சாவூர்
ஆசிரியர் கலைவளர்மணி ஈஸ்வரன், கண்ணாடி ஓவியங்களை தஞ்சாவூர் டாக்டர்.குமரேசன், பானை ஓவியங்களை திருவாரூர் ஓவியர் கலைசுடர்மணி யோகானந்தம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் 167 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும். ஓவியங்களை பார்வையிட்ட திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் மு.க.சுந்தர் மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஜவகர் சிறுவர் மன்ற திருச்சி திட்ட அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.