முக்கொம்பு சுற்றுலா தலத்தில் நிற்காத பஸ்களால் பயணிகள் அவதி

0 371
Stalin trichy visit

திருச்சி ஶ்ரீரங்கம் தொகுதி முக்கொம்பு சுற்றுலா தலத்தில், அரசு, தனியார் பஸ்கள் நிற்காமல் செல்வதால், சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.திருச்சி-கரூர் மாவட்ட எல்லையில் காவிரியாற்றின் குறுக்கே, கொள்ளிடம் ஆறு பிரியும் இடத்தில் முக்கொம்பு சுற்றுலா தலம் உள்ளது.காவிரியாற்றின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு, பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், கரூர், குளித்தலை வழியாக திருச்சி செல்லும் பஸ்சில், முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு செல்ல வேண்டும். ஆனால் அரசு, தனியார் பஸ்கள் முக்கொம்பு பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கிருந்து டவுன் பஸ் மூலம், முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு செல்ல வேண்டும். இல்லையேல், ஆட்டோ, கார் மூலம் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டும்.
பஸ்களை நிறுத்தாததால், 25 கிலோ மீட்டர் துாரம் சுற்றுலா பயணிகள் அலைய வேண்டிய நிலை உள்ளது.முக்கொம்பு சுற்றுலா தலத்தில், பல லட்சம் ரூபாய் செலவில், 2011-16ல், குட்டி ரயில் உள்ளிட்ட, பொழுது போக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், முக்கொம்பு சுற்றுலா தலம் முன், இரு பக்கமும் புதிதாக பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டும், பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. ஆனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், தொட்டியம், முசிறி வழியாக சென்று, திருச்சி மாவட்டம் வாத்தலை பஸ் ஸ்டாப்பில் இறங்கி, எதிரே உள்ள முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு எளிதாக செல்கின்றனர்.கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், முக்கொம்பு சுற்றுலா தளம், பஸ் ஸ்டாப்பில் அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்த, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Leave A Reply

Your email address will not be published.