வழிப்பறி திருடனை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

0 715
Stalin trichy visit

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்த வாலிபர்கள். புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், ஆய்குடி, வங்காரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம கும்பல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்களை நோட்டமிட்டு அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து பணம், செல்போன் மற்றும் நகைகளை பறித்து வந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிறுகனூர் போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லாததால் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை பிடிக்க 5 கிராமத்தை சேர்ந்த வாவிபர்கள் சிலர் குழுவாக அமைத்து இரவு நேரங்களில் கிராம பகுதியை சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தில் காட்டு பகுதியில் உள்ள கல்லுபிள்ளையார் கோவில் பகுதிக்கு வாலிபர் குழு சென்றபோது அங்கு இருட்டான பகுதியில் பதுங்கி இருந்த 3 மர்ம நபர்கள் வாலிபர்கள் வருவதை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

இதனை கண்ட வாலிபர்கள் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். இதில் திருச்சி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த 24 வயதான பரத்குமார் என்ற இளைஞர் மட்டும் பிடிபட்டார். மற்ற இரண்டு பேர் வாலிபர்களிடம் சிக்காமல் தப்பி சென்றுவிட்டனர்.

பிடிபட்ட நபருக்கு தர்ம அடி கொடுத்த வாலிபர்கள் அவரை அக்கரைபட்டி கிராமத்தில் உள்ள பொது கட்டிடம் ஒன்றினுள் பூட்டி வைத்துவிட்டு சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பிடிபட்டதாக அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு செய்தி பரவியது.

வழிப்பறியில் நகை, பணத்தை பறிகொடுத்தவர்கள் உள்பட கிராம மக்கள் ஏராளமானோர் அக்கரைபட்டி கிராமத்தில் திரண்டனர். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழிப்பறியில் கழுத்தில் காயம் ஏற்பட்ட நபர் ஒருவர் பிடிபட்ட இளைஞனை பார்வையிட்டு உறுதி செய்ததை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கொந்தளித்து அந்த இளைஞனை தாக்க முயன்றனர்.

அப்போது அங்கு வந்த சிறுகனூர் போலீசார் பொதுமக்களின் பிடியில் இருந்து இளைஞனை மீட்டு சுமோவில் ஏந்தி செல்வ முயன்றபோது, நாங்கள் கொடுத்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பிடிபட்டவரை நாங்களே பார்த்துகொள்கிறோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் வாகனத்தை செல்லவிடாமல் சூழ்ந்துகொண்டு அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில் ஆயுதப்படை போலீசார் அக்கரைப்பட்டி கிராமத்தில் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து சிறுகனூர் போலீசார் பிடிபட்ட பரத்குமாரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.