குண்டும் குழியுமான சாலை: சி.பி.எம். கட்சியினர் பால் தெளிக்கும் போராட்டம்
திருச்சி, ஜூலை 15 ஸ்ரீரங்கம் – திருவானைக்காவல் பகுதியை இணைக்கும் மேம்பாலம் அருகே காந்தி ரோட்டில் கடந்த வருடம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட சாலையை முறையாக போடாமல், குண்டும் குழியுமாக போட்டனர்.
இதனால் கடந்த ஒரு வருடமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும்
மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் செவ்வாய் அன்று குண்டும் குழியுமாக உள்ள சாலைக்கு பால் தெளிக்கும் போராட்டம் நடந்தது .
போராட்டத்திற்கு கிளை செயலாளர் செல்லமுத்து தலைமை வகித்தார்.
போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், சந்தானம், பகுதி செயலாளர் தர்மா, பகுதிக்குழு தோழர்கள் கோவிந்தன், ரகுபதி, செந்தில் ஆகியோர் பங்கேற்றனர் அப்போது அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இரவு சாலையை சமன்படுத்தி சிமெண்ட் கலவை போடப்பட்டுள்ளது. இன்னும்15 நாட்களில் சாலை அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பால் தெளிக்கும் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.