ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
திருச்சி, மார்ச் 12 திருச்சி மாவட்டம், துறையூர், நல்லியம்பாளையம் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாயகி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் மாசி மாத வளர்பிறை மஹா பிரதோஷ விழா மாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைப்பெற்றது.
முன்னதாக மூலவர் ஸ்ரீ கைலாசநாதருக்கும் எதிர் திசையில் அமைந்துள்ள நந்திக்கும் பன்னீர், இளநீர், பால், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், தேன், அரிசிமாவு, திருமஞ்சனம், மஞ்சள்தூள், மலர்கள் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவரான ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் நந்திக்கு பூமாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோவிலில் அமைந்திருக்கும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ கைலாச நாயகி, கணபதி, முருகன், முப்பெரும் தேவியர், காலபைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், 18 சித்தர்கள், மாரியம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கும் பூமாலை கள் அணிவிக்கப்பட்டு பொங்கல் தேங்காய் வாழைப்பழம் ஆகியவை கொண்டு பூஜிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கைலாசநாயகி ஸ்ரீ கைலாசநாதர் ஆகிய தெய்வங்களின்
உற்சவர் திருவீதி உலா காளை வாகனத்தில் நடைப்பெற்றது.
கோவிலின் உற்பிரகாரத்தில் மூன்று முறை உற்சவர் அம்பாளுடன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிவ பக்தர்கள் சிவ சிவ என்ற நாமத்தை எழுப்பினர்.
மங்கள இசையான நாதஸ்வர வாத்தியம் இசைக்கப்பட்டு சிவனுக்கான அனைத்து மந்திரங்களும் பாடல்களும் அர்ச்சகர்களால் தமிழ் மொழியில் சொல்லப்பட்டு வழிபாடு ஆராதனை நடைப்பெற்றது. வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் மாலை ஆறு மணிக்கு தீப ஆராதனை வழங்கப்பட்டு பிரசாதங்கள் மற்றும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.
துறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களான புத்தனாம்பட்டி, சொரத்தூர், முத்தியம்பாளையம், , புளியம்பட்டி, மேலகுன்னுப்பட்டி, கீழகுன்னுபட்டி, அம்மாபட்டி, காளிப்பட்டி, பகளவாடி, அடிவாரம் ஆகியப் பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் இந்த மாசி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டார்கள்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். துறையூரைச் சேர்ந்த தனியார் பயணியர் பேருந்து நிறுவனமான எஸ்.எல்.ஆர் பேருந்து பக்தர்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கும் மீண்டும் பூஜைகள் முடித்தப் பின் கோவிலில் இருந்து துறையூர் செல்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தது.