கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஆக.28 திருச்சி மாவட்டம், தா.பேட்டை கடைவீதியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர். தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், பாலகுமார், நித்தியானந்தன் உள்ளிட்ட பலர் பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.45, எருமை பால் லிட்டருக்கு ரூ.60 என உயர்த்தி வழங்க வேண்டும், பால் லிட்டர் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10 வழங்க வேண் டும். தரமான கலப்பு தீவனம் 50 சதவீதம் மானியத்துடன் வழங்கவேண்டும். பாலில் இருந்து தனியார் நிறுவனம் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்வதுபோல், ஆவின் நிறுவனத்தில் உற்பத்தி செய்து விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். சத்துணவு திட்டத்தில் பால் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது பால் உற்பத்தியாளர்கள் கொண்டுவந்த பாலை சாலையில் கொட்டி பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தா.பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், சஞ்சீவி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.