மணப்பாறை அருகே புதிய தொழிற்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் : அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

0 34
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 24  மணப்பாறை அருகே புதிய தொழிற்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் : அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அமைந்துள்ள சிப்காட்டில் புதிதாக 110 கோடி மதிப்பீட்டில் சுமார் 32 ஏக்கர் பரப்பளவில் கனிம நிறமிகள் மற்றும் சிக்கலான கனிம நிறமிகளின் உற்பத்திக்கான தொழிற்சாலை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் முத்தபுடையான்பட்டியில் உள்ள சமுதாயக்கூட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி, மாசுகட்டுபாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் அகல்யா மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை, வருவாய்த்துறை கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு சிப்காட் தொழிற்பேட்டைக்கு சம்பந்தம் இல்லாத வெளியூர் நபர்களை சரக்கு வேன்களில் ஏற்றி வந்ததால் முத்தப்புடையான்பட்டி மற்றும் சிப்காட் பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். கூட்டம் தொடங்கியதுமே கண்டிப்பாக தங்கள் பகுதியில் புதிய தொழிற்சாலை தொடங்க அனுமதிக்க கூடாது என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முறையான அறிவிப்பு வெளியிடாமல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், வேறு பகுதியில் இருந்தும் மக்களை அழைத்து வந்துள்ள நிலையில் வேறொரு தேதியில் முறையாக அறிவிப்பு செய்து கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று கூறி மக்கள் கூச்சலிட்டனர். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி அகல்யா மக்களிடம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருக்க ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி பொதுமக்களை பார்த்து சொல்வதை கேளுங்கள் என்று கூறியதால் ஆவேசமடைந்த மக்கள் மீண்டும் கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை ரத்து செய்து மற்றொரு நாளில் இப்பகுதி பொதுமக்களுக்கு தெரியும் வகையில் முறையான அறிவிப்பு செய்து கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தக்கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் இந்த கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து பிறிதொரு நாளில் நடத்துவது என ஆர்.டி.ஓ.,வும் சுற்றுச்சூழல் துறை மாவட்ட பொறியாளரும் அறிவித்தனர். பின்னர் அதிகாரிகள் வெளியில் சென்ற போது அவர்களை பொதுமக்கள் பின் தொடர்ந்து கேள்வி கேட்டதால் அதிகாரிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கருத்து கேட்பு கூட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகளை இங்கு அனுமதிக்கக்கூடாது என மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.