திருச்சியின் முக்கிய சாலைகளில் நடக்கும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களால் டிராபிக்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திருச்சி மாநகராட்சியின் பிரதான சாலைகளான அண்ணாசிலை பகுதி, மரக்கடை பகுதி, பாலக்கரை ரரவுண்டனா பகுதி, புத்தூர் நான்கு ரோடு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்ககூடாது என்பதினை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்துக்கு சாலை பயனீட்டாளர் நல அமைப்பினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:- “திருச்சி மாநகர அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் தினம்தோறும் வந்து செல்லக்கூடிய பயணம் செய்யகூடிய பிரதான சாலைகளான சிந்தாமணி, அண்ணாசிலை பகுதி, மார்கெட் மரக்கடை பகுதி, பிரபாத் தியேட்டர் பாலக்கரை ரவுண்டனா பகுதி, புத்தூர் நான்கு ரோடு பகுதிகளில் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டங்கள்,
பொதுக்கூட்டங்கள் என பல்வேறு நிகழ்வுகள் சாலைகளில் நடந்து வருவதால் தினசரி சாலையில் பயணிகள் சாலை பயனீட்டாளர்கள் பல்வேறு வகையில் பெரிதும் பாதிக்க பட்டு வருகிறார்கள். வளரும் சீர்மிகு நகரமான திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணங்களாக இருக்ககூடிய முறைபடுத்தப்படாத, கட்டிட வரன்முறை சட்டங்கள் வாகன நிறுத்தும் இடங்கள், தேசிய சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம், ஆட்டோ ஸ்டேண்ட்கள் இவற்றால் திருச்சி மாநகரம் போக்குவத்து நெரிசலால் தினந்தோறும் திணறி வரும் வேளையில்
மேலே குறிப்பிட்ட இடங்களில் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் சார்பாக நடைபெறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு காவல்துறை சார்பாக அனுமதி அளிக்கக்கூடாது. பிரதான சாலைகளில் ஆய்வு செய்து வரும் காலங்களில் திருச்சி மாநகரை போக்குவரத்து நெரிசல் இல்லா நகராக மாற்றவும், திருச்சி மாநகரின் மத்திய பகுதியாக விளங்கும் நெரிசல் இல்லாத பிரதான சாலைகள் இல்லாத இடங்களை தேர்வு செய்து மேற்கண்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.